குரல்கள்

Thursday, 19 January 2017

காரும் தேரும்

தமிளர்கலின் தமிளுணர்வு இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது. ஈளம் மாதிரியே ஜல்லிக்கட்டுக்காகவும் காலைகள் பொங்கியெளுந்துவிட்டன. ஒரு வேளை இந்தக் காளைகளை மத்திய மாநில அரசுகள் தளுவி அதாவது ஏறு தளுவி அடக்கிவிடலாம். அல்லது காளைகள் திமிலை சிலிர்த்துக்கொண்டு அவர்களை உதறித் தமிள்ப் பண்பாட்டைக் காப்பாற்றிவிடலாம். 

ஆனால் தமிள்ப் பண்பாடு என்பது என்ன? ஏற்கெனவே நான் பலமுறை கூறியிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சூழலை வளர்த்துவிட்டு நமக்கு நேரடி பாதிப்பு வரும் வரை அது பற்றிக் கவலைப்படாதிருப்பது. பாதிப்பு வந்ததும் குய்யோ முறையோ என்று அலறுவது. இப்போது ஒரு தவறான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கோர்ட் உத்தரவை வெகுஜனப்போராட்டம் மூலம் மாற்றுவது. அது நீண்டகால நோக்கில் நாட்டுக்கு நல்லதல்ல.

ஜல்லிக்கட்டு மீதான தடை ஒன்றும் ஓரிரவில் நடந்த கார்ப்பரேட் சதியோ கலாசார ஒடுக்குமுறையோ அல்ல. அது இயல்பாகப் பல வருடங்களாக நடந்த பரிணாமத்தின் தொடர்ச்சி. நாட்டு மாடுகளுக்கான தேவை கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து வருவது வணிக ரீதியான விளைவு. பால் அதிகம் கறக்கிற வகைகளையே மாட்டு உரிமையாளர்கள் விரும்புவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? அரிசி, காய்கறி, பழங்கள் எல்லாவற்றிலுமே மரபணு மாற்றம் செய்யப்பட்டவை, செயற்கை உரம், மருந்து போடப்பட்டவை வந்திருக்கிற மாதிரிதான் இதுவும். பண்பாடு என்பதே எப்போதுமே மாறிக்கொண்டிருக்கிற ஒன்றுதான். சங்ககாலத்து உணவு, உடையையா இன்று நாம் பின்பற்றி வருகிறோம்? இந்தப்போராட்டத்துக்கு வந்திருக்கிற காளையர்களில் எத்தனைபேர் வேட்டி அணிந்து வந்திருக்கின்றனர்? மக்கள்தொகை பெருகி வெடிக்கும்போது பாரம்பரிய விவசாயம் மூலம் அனைத்து மக்களுடைய தேவைகளையும் தீர்ப்பது இயலாத காரியம். உரம், பூச்சிக்கொல்லியால் ஏற்பட்ட பின்விளைவு நோய்களால் அவதியுறாவிட்டால் மனித குலம் உணவுப்பஞ்சத்தால் துன்பப்பட நேரும். இப்போது மின்சார வசதியுள்ள காலத்தில் ஷாக் அபாயம் நேரிடுகிறது. போன நூற்றாண்டில் மின்சாரம் இல்லாத இருட்டில் பாம்பு, தேள் முதலியவற்றால் ஆபத்து நேர்ந்திருக்கும். Choosing between devil and deep seaகதைதான்.

மதம், கலாசாரம், பண்பாடு பாரம்பரியம் இத்தியாதி இத்தியாதிகளை சுருட்டியெறிந்து தூக்கி வீசக்கூடிய சக்தி ஒன்று உண்டென்றால் அது நடைமுறை வசதி என்பதுதான். கடவுளைக்கூட நாம் நமது நடைமுறை வசதிக்குட்பட்டுத்தான் மதிப்போம் என்பதே உண்மை. சொல்லப்போனால் பண்பாடு என்பதே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைமுறை வசதியாக இருந்த ஒன்றுதான். மாட்டு வண்டியில் பயணம் செய்த காலத்தில் விபத்துகள் மிகக்குறைவாக இருந்திருக்கும். அதற்காக அதுதான் பண்பாடு என்று அத்துடன் நிற்க முடியுமா? கார்கள் தவிர்க்க முடியாதவை. அதேதான் நாட்டு மாடுகள் VS மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாடுகள் விஷயத்திலும். நாட்டு மாடு இனங்கள் அழியாமல் காக்க ஜல்லிக்கட்டை ஒரு சாக்காகக் கூறும் வாதம் மிகவும் சொத்தையானது. அழகிப்போட்டியை இந்தியாவில் நடத்தக் கலாசாரக் காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்த காலத்தில் ஆதரவாளர்கள் இந்தியப்பொருளாதாரம் மேம்படும், அந்நியச் செலாவணி தேவை பூர்த்தியாகும் என்று ஒரு சொத்தைவாதம் வைத்தார்களே, அதுபோன்ற நகைச்சுவை இது. நாட்டு மாட்டைக் காப்பாற்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறுவோம், தனித்தமிழ்நாடு கோஷம்போட்டு அரசியல்சட்டத்தையும் அவமதிப்போம்  என்று துணியும் அளவு நாட்டு மாட்டு இனங்கள் மீது காதல் கொண்டவர்களுக்கு ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் அவற்றைக் காப்பாற்ற இயலாது என்றால் வேடிக்கையாக இல்லை?

என் முகநூல் பக்கத்தில் நான் கண்ட பதிவு: ஒரு ஐடி காளை இட்டிருந்தது. நீங்க ஜல்லிக்கட்டைத் தடை செய்தா நாங்க OMRல வேலைய நிறுத்தி ஐடி இண்டஸ்ட்ரியையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவோம். அவ்வளவு ஆர்வம் இருக்கிறவர் 10 காளை மாடுகளை வாங்கி அவற்றை நூறாக ஆயிரமாகப்  பெருக்க ஏன்முயலக்கூடாது? மெரினாவில் திரண்டிருக்கிற இத்தனை பேர் மனது வைத்தால் ஜல்லிக்கட்டு என்கிற pretextக்காக அல்லாமல் நாட்டு மாடுகளைக் காப்பதற்காகவே அவற்றை வளர்க்கலாமே? கும்பலாகக் கிளர்ந்தெழுந்து கோர்ட் தீர்ப்பை மீறுவது என்ற வழக்கத்தை உருவாக்குவதும் ஆதரிப்பதும் ஆரோக்கியமான சூழல் அல்ல. ஒரு வேளை ஜல்லிக்கட்டு ஒன்றே தமிழ் அடையாளம் அதைக் காத்தே ஆக வேண்டும் என்றாலும் நிதானமாக யோசித்தால் பல வழிகள் கிடைக்கும்.  நாட்டு இனங்கள் அழியாமலிருக்க வேறு முயற்சிகளை எடுத்தபடியே டெல்லியில் கொஞ்சம்கொஞ்சமாக திறம்பட லாபியிங் செய்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க முயற்சிகள் செய்யலாம். பண்பாட்டு கலாச்சார விஷயங்களில் கோர்ட் தீர்ப்பு கொடுப்பதற்கான நடைமுறைகள் அரசியல் சட்டத் திருத்தமாகக் கொண்டுவரப்படலாம். இதுபோன்ற விஷயங்களில் தீர்ப்பளிக்கப்படும்போது நீதிமன்றத்தில் ஜூரி அமைப்பு இயங்க வேண்டும் அதில் எல்லாத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுபோல திருத்தங்கள் செய்ய முயற்சி செய்யலாம். அதிரடியாகக் கோர்ட் தீர்ப்பை மீறுவது கவர்ச்சிகரமாகத் தோள்கள் தினவெடுக்க உதவலாமே தவிர அது நீண்டகாலத்தில் நாட்டுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். உணர்ச்சி வசப்பட்ட சில ஆயிரம் இளைஞர்கள் சேர்ந்து மிரட்டினால் கோர்ட் தீர்ப்பு மாற்றப்படும் என்பது நிச்சயம் நாட்டுக்கு ஆரோக்கியமனதல்ல. கிரிக்கெட் பார்க்கிறவர்கள் சேர்ந்து ஒரு விளையாட்டாளருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தால் அம்பயர் தீர்ப்பை மாற்ற வேண்டும் என்பது போன்ற அபத்தம் இது.  

ஸ்பெய்ன், ஆஸ்திரேலியக் காளை விளையாட்டுகளில் செய்வதுபோல் ஜல்லிக்கட்டில் மாட்டுக்கு உடல்ரீதியான காயங்கள் இல்லை, மனிதனுக்கே காயம் என்று ஒரு வாதம். ஆனால் மாட்டைச் சீண்டிவிடுவது ஒரு உளவியல் சித்திரவதை. உணவுக்காக உயிர்களைக் கொல்வதும் பால் கறப்பதும்கூட மிருகத்துக்கு இழைக்கப்படும் தீங்குதான். அதற்காக பலகோடி மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்றுவது இயலாத காரியம். அது தவிர்க்க இயலாதது. மாடு புனிதம் என்பதோ பால் நல்லதா கெட்டதா என்பதோ மட்டுமல்ல, தார்மீக ரீதியான சரி, தவறுகள் என்பவை எல்லாமே மிக அண்மையில் எழுந்த வாதங்களே. அதற்கு முன் பல்லாயிரம் வருடங்களாக மனிதன் இயற்கையில் கலப்பு உண்ணிதான். உணவு என்று வரும்போது பிற உயிர்களை அழிக்கவும் சுரண்டவும் எல்லா உயிர்களுக்கும் இயற்கை லைசன்ஸ் வழங்கியிருக்கிறது. அது உணவுச்சங்கிலி என்ற பெயரில் மிக எளிதாக நியாயப்படுத்தக்கூடிய விஷயம். ஆனால் வேடிக்கை, விளையாட்டுக்காக ஒரு உயிரைச் சீண்டி விடுவது உடல் காயமில்லாவிட்டாலும் மிகவும் குரூரமானது. நியாயப்படுத்த இயலாதது.

நாங்க மாட்டை  நல்லாப் பாத்துக்கறோம், நீங்க சொல்லித்தர வேண்டாம் என்ற தொனியில் முகநூலில் பல பதிவுகள் நடமாடிக்கொண்டிருக்கின்றன, மாட்டை முத்தமிடுவதுபோலும் அணைத்திருப்பது போலும் புகைப்படங்களோடு. நீங்கள் அணைப்பதும் முத்தமிடுவதும் பொய்யல்ல. ஆனால் அதற்காக அதை சீண்டும் உரிமையை நீங்களே எடுத்துக்கொள்ள முடியாது. வீட்டுப் பெண்களுக்கு பட்டுப்புடைவையும் நகையும் வாங்கித் தந்துவிட்டு ஆண்கள் நான்கு பேர் எதிரில் அவர்களை சீண்டிவிடுவது அல்லது கலாய்ப்பது  போன்றது இது. பெண்ணின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றால் நாங்கதான் புடைவையும் நகையும் வாங்கித் தந்தோமே நீங்க ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேண்டாம் என்பதுபோன்ற வாதம் இது.

ஜல்லிக்கட்டில் மதமும் பண்பாடும் பாரம்பரியமும் இருக்கலாம். ஆனால் மதம், பண்பாடு, பாரம்பரியம் பரிந்துரைத்த விஷயங்கள் பலவற்றை நாம் காலப்போக்கில் கைவிட்டிருக்கிறோம். கிராம தெய்வ வழிபாடுதொடர்பான சடங்குகள் ஜல்லிக்கட்டில் அடங்கியிருப்பது உண்மைதான். ஆனால் எந்தப் பீட்டாவும் சொல்லாமலே அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்றதனால் வருடா வருடம் சொந்த ஊருக்குப்போய்ப் பொங்கல் வைப்பதையும் கடா வெட்டுவதையும் பல தமிழர்கள் தாங்களாகவே வலியக் கைவிடவில்லையா? பலர் பிறந்த நாட்டை வளர்ந்த ஊரை, முக நூலில் உருகும் விவசாயத்தை ஏன் பெற்ற அப்பா, அம்மாவைக்கூடப் பணத்துக்காகப் பிரியத் தயாராவது எந்தக் கோர்ட் உத்தரவினால்? பெற்றோரை முதியோர் இல்லங்களில் விடுவது எந்த அந்நியக் கார்ப்பரேட் சதியால்? எந்த நாடு நமக்கு வசதியான வாழ்க்கையைத் தருகிறதோ அதை நாடிச் செல்வதில் தவறில்லை. ஊரையும் உறவினரையும் பணம் அல்லது தொழில் நிமித்தம் பிரிந்து செல்வது அவ்வாறு செல்பவர்களின் தனிப்பட்ட உரிமை. நான் சொல்ல வருவது பண்பாடு என்பது நடைமுறை வசதிக்காக நெகிழ்ந்துகொடுக்கக்கூடியது. அந்த நெகிழ்வு இயற்கையானது. நெகிழ்ந்தால்தான் அது பண்பாடு என்ற பெயரில் குறைந்த பட்சம் காட்சிப்பொருளாகவாவது தொடர முடியும்.. பண்பாடு தேர். அதைக் கண்காட்சியில் வைத்துப் பார்க்கத்தான் முடியும். நடைமுறை வசதி கார். அதில்தான் பயணிக்க முடியும். கார் வந்தால் தேர் ஒதுங்கி வழிவிட்டுத்தான் ஆக வேண்டும் என்பதற்கு முகநூலில் ஜல்லிக்கட்டு DP போட்டிருக்கிற பலரின் இருப்பிடம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் என்பதே கண்கூடான சாட்சி.        

Wednesday, 14 October 2015

அவலை நினைத்து உரலை.....


மாட்டுக்காக மனிதனைக் கொன்றது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான். கல்புர்கி கொலையும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் மதச்சார்பின்மை, மாட்டிறைச்சிக் கலவரங்களுக்கும் சாஹித்ய அகாடமிக்கும் என்ன சம்பந்தம்?
சாஹித்ய அகாடமியின் நோக்கங்கள், செயல்பாடுகள் என்ன? அது ஒரு ACADEMIC INSTITUTION. விருது கொடுப்பது தவிரப் பல்வேறு இந்திய மொழிகளில் இருக்கும் நூல்களைப் பிரசுரம் செய்வது, மொழிபெயர்ப்ப்புப் பணிகளை ஊக்குவிப்பது, இலக்கியம் தொடர்பான உரைகள், நிகழ்வுகள் நிகழ்த்துவது.... இத்யாதியே அதன் பணிகள். அது ஒன்றும் எழுத்தாளர்களுக்கெதிரான குற்றங்கள் அல்லது பிற சமூகக் குற்றங்களைக் கண்டிக்கும் பொறுப்புடைய அமைப்பல்ல.

கருத்து சுதந்திரத்தைக் காக்கும் கடமை அகாடமிக்கு வேண்டுமென்று ஏன் திடீர் எதிர்பார்ப்பு வருகிறது? கடந்த காலத்தில் அகாடமி எத்தனை முறை கருத்து சுதந்திரத்தைக் காக்க கருத்து தெரிவித்திருக்கிறது?
இது தொடர்பாகத் தமிழ் எழுத்தாளர்கள் விட்டுள்ள அறிக்கையில் அகாடமி போதுமான அளவு கண்டிக்கவில்லை என்று கூறியுள்ளனர். போதுமான அளவுக்கு என்ன வரையறை? இது (கல்புர்கி கொலை) போன்ற நிகழ்வுக்கு அதிகபட்சம் அகாடமியின் தலைவர்/ செய்தித் தொடர்பாளர் இது துரதிர்ஷ்டவசமானது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கக்கூடும். அதற்குமேல் எவ்வளவு கண்டனம் தெரிவித்தால் போதுமானதாக இருக்கும்?

என்னதான் தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும் அரசாங்க ஆதரவுக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட ஒரு அமைப்பு கருத்து தெரிவித்தால் அதுவும் எல்லாக் கருத்துகளையும் போல் காற்றோடு கலக்கப் போகிறதே தவிர அது எழுத்தாளர்கள் எதிர்பார்க்கும் அளவு போதுமானதாக எப்படி இருக்கும்?

சரி, சாஹித்ய அகாடமி கருத்து சுதந்திரம் பற்றி வேறு என்னதான் செய்ய இயலும்? எழுத்தாளர்கள் விருதைத் திருப்பித் தருகிற மாதிரி அகாடமி உன் ஆதரவு ஒண்ணும் வேணாம், போ என்று அரசாங்க ஆதரவை நிறுத்திக்கொள்ள வேண்டுமா?

இப்போது இந்தத் திருப்பித் தரும் உற்சவம் திடீரென்று துவங்குவதன் மர்மம் என்ன? தெரியவில்லை. ஆனால் இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? இது தொடர்பாக எனக்குத் தோன்றும் கேள்விகள்:
நாட்டிலுள்ள எல்லா ACADEMIC INSTITUTIONகளும் இது போன்ற நிகழ்வுகளுக்குக் கருத்து தெரிவிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படுவார்களா? எனில் கருத்து சுதந்திரம் என்பது கருத்து  சொல்லாமலிருக்கிற உரிமையை உள்ளடக்கியதா இல்லையா?

ஒரு பல்கலைக்கழக மாணவர் மாணவர் தேர்தல் அல்லது கட்சி தொடர்பான தகராறுகள் போன்ற ஏதோ ஒரு காரணத்துக்காகத் தாக்கப்படுகிறார் என்றால் பல்கலைக்கழகம் அதைக் கண்டித்து ஒரு சம்பிரதாய அறிக்கை விடலாம். அது போதுமானதில்லை என்று அறிவுசீவிகளுக்குத் தோன்றினால் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதி உதவி வேண்டாம் என்று ப்பல்கலைக்கழகம் மறுக்க வேண்டுமா? அப்படி மறுக்காவிட்டால் அறிவுசீவிகள் பல்கலைக்கழகப் பட்டங்களையும் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா?

நாட்டிலுள்ள எல்லா ACADEMIC INSTITUTIONகளும் இதுபோல் கருத்து சுதந்திரம் பற்றிக் கருத்து வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானால் அப்புறம் அவர்கள் அரசியல் கட்சிகள் லெவலுக்கு இறங்கிவிட மாட்டார்களா? அப்புறம் அவர்களது பணிகள் எப்படி நடக்கும்?
தவிர இதற்கென்று ஏற்படுத்தப்பட்ட மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் போன்றவற்றின் கடமைகளை அகாடமி கையிலெடுத்துக்கொண்டால் நீதிமன்றங்கள் இனிமேல் அகாடமி விருது வழங்குகிற வேலையை எடுத்துக்கொள்ளுமா?

ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று எழுத்தாளர்கள் விரும்பினால் இருக்கிற ஆணையங்களுக்குக் கூடுதலாக எழுத்தாளர் கருத்துரிமைப் பாதுகாப்பு ஆணையம், மாட்டிறைச்சி உண்ணும் உரிமை ஆணையம் என்று ஏற்படுத்த அரசை நிர்ப்பந்திக்கலாம். அரசு செவி சாய்க்காவிட்டால் அரசு ந்த விருதுகள் சான்றிதழ்கள் மட்டுமின்றி நில, வீட்டு, சொத்து ஆவணங்கள், EB கார்ட், ரேஷன் கார்ட், ஆதார் கார்ட், வோட்டர் ஐடி உட்பட எல்லாவற்றையும் அரசுக்கே திருப்பித் தரும் நூதனப்போராட்டம் நடத்தலாமே?  

இந்துத்துவத் திணிப்பு மற்றும் அதன் விளைவான கருத்துரிமை ஒடுக்குதலைக் கண்டிப்பதற்காக சாகித்ய ஆகாடமி போன்ற நிறுவனங்கள் அரசியல்மயமாக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத விஷயமல்ல. மொழித் திணிப்பை எதிர்க்கிறேன் பேர்வழி என்று மாணவர்கள் மீது அரசியலைத் திணித்துக் கல்லூரிகளை அரசியல் மைதானமாக்கி மாணவ சமுதாயத்தை நிரந்தர சமூக சீர்கேட்டின் அடையாளமாக மாற்றிவிட்ட திராவிட வரலாற்றைப் பார்த்தாலே போதுமே?

மக்கள் மதிப்புக்கு உள்ளான யாரைப் பற்றியும் அது ராஜராஜ சோழனாகட்டும், அப்துல் கலாமாகட்டும், எம்.எஸ். சுப்புலட்சுமியாகட்டும், அவர்களின் இயங்குதளம் என்ன என்று கவலைப்படாமல் இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்தார் என்று கொக்கரிக்கிற மதிமாறன்தனமாக இருக்கிறதே?

இந்துத்துவ சக்திகளை எதிர்த்து ஏதாவது செய்து மதச்சார்பின்மையை நிலைநாட்டிக்கொள்ள நினைத்து அவலை நினைத்து உரலை இடித்தால் அது கடைசியில் பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகத்தான் ஆகும்.

பி.கு:
அடுத்து புரட்சிக் கலைஞர் டி எம் கிருஷ்ணா மியூசிக் அகாடெமி வழங்கிய விருதுகளை இசைகலைஞர்கள் திருப்ப வேண்டும் என்பாரோ?


Saturday, 1 August 2015

யாருக்கு அஞ்சலி?

யாருக்கு அஞ்சலி?
ஏவுகணை மனிதரின் தோல்விகள்:
1) முதலாவது, அவர் அணுஆயுத சோதனைகளில் முக்கியப் பங்காற்றினாரே தவிர ஆர்டிஎக்ஸ் குண்டு வெடிப்பில் பங்கேற்கவில்லை. (இதில் ராக்கெட்டுகள் அழிவுக்கு மட்டுமே பயன்படுவது. ஆர் டி எக்ஸ் அமைதிப்பணிகளுக்கு மட்டுமே ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.)
2) அவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்த துப்புரவுப் பணியாளர்களின் சம்பள பாக்கி பற்றிக் குரல் எழுப்பவில்லை. அதனால் அவர் ஒரு தலித் விரோதி.
3) அவர் படித்த அரசுப் பள்ளியின் கூரை ஒழுகியது பற்றி எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அதனால் அவர் அரசுப்பள்ளிக் கூரைகளின் எதிரி.
4) ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தினாரே தவிர சாதாரண மக்கள் பயணிக்கும் மாநகர பஸ்களில் கண்டக்டர்கள் சில்லரை திருப்பிக் கொடுக்காதது பற்றி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர் சில்லரை புத்தி படைத்தவர்.
5) எக்ஸைல், ராஸலீலா, மதுமிதா சொன்ன பாம்புக்கதைகள் எதுவும் படிக்கவில்லை. தினத்தந்தியில் சிந்த்பாத் படிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
6) அவர் அணிந்திருந்த சூட் வண்ணங்கள் நன்றாக இல்லை.
7) அவரது ஹேர்ஸ்டைல் முடிதிருத்தக்கலைஞர்கள் பால் அவருக்கிருந்த அலட்சியத்தையே காட்டுகிறது.
8) தமிழ்ப் பற்றாளர் என்று சொல்லிக்கொண்டாரே தவிர ஃபேஸ்புக்கில் கண்டபடிப் பொங்கிக் கருத்துதிர்த்துத் தமிழ் மரபைப் பேணவில்லை. ஆராய்ச்சி என்ற பெயரில் பொன்னான காலத்தை வீணடித்த தமிழ் விரோதி. அவர் கருத்துதிர்க்காத பிரச்சினைகள் பின்வருமாறு:
சென்னை தண்ணீர்ப் பிரச்சினை, மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் மரணம், விதர்பா விவசாயிகள் தற்கொலை, பி.டி. பருத்தி, கத்திரிக்காய் விவகாரம், ஐ.பி.எல் சூது, டாவின்ஸிகோட் திரைப்படத்தைத் தடை செய்த விவகாரம், தமிழ் நடிகர் சங்கக் கட்டிட சர்ச்சை, கெய்ல் குழாய் பதித்த விவகாரம், மாதொருபாகன் விவகாரம், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு விவகாரம், துபாய் ஏஜென்டுகள் ஏழைகளை ஏமாற்றிப் பணம் பறிப்பது, நிதிநிறுவன மோசடிகள், தமிழ்ப் பின் நவீனத்துவ எழுத்தாளர்களின் கருத்து மோதல்கள், சிறுபான்மையினர் உரிமை, பெரும்பான்மையினர் உரிமை, பெண் உரிமை, போராளி உரிமை, மாணவர் உரிமை, மனித உரிமை, விளிம்பு நிலை மக்கள் உரிமை, தீவிரவாதிகள் உரிமை, தீவிரவாதிகளுக்கு பேட்டரி மட்டும் வாங்கிக்கொடுக்கும் உரிமை, அப்பாவி உரிமை, போராளி உரிமை, நிரபராதி உரிமை, ஒரே நேரத்தில் அப்பாவியாகவும் போராளியாகவும் நிரபராதியாகவும் இருக்கும் அதிசய உரிமை,  அப்பாவி- போராளி- நிரபராதிகளின் தூக்கு தண்டனை விவகாரம், தீவிரவாதிகள் நினைத்தபோது வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான உரிமை இல்லாத அவலம், முன்னாள் பிரதமரை வெடிகுண்டு வைத்துக்கொல்லக்கூட அடிப்படை உரிமை மறுக்கப்படும் அவலம், மனித வெடிகுண்டுகள் ஒடுக்கப்படும் அவலம்......  பட்டியல் நீளும் வேகத்தை நினைத்தாலே தலைசுற்றவில்லை? என்ன ஒரு பொறுப்பற்றதனம்!
9) இந்தியாவை முன்னேற்றிவிடலாம் என்று நம்பினார். இது ஒன்று போதாதா இந்த மனிதரின் அற்பத்தனத்தைக் காட்ட?
குண்டுவெடிப்பு தியாகியின் சாதனைகள்:
1)   257  பேரைக் கொன்றது பற்றி எந்த ஒரு கர்வமோ படாடோபமோ இல்லை. அதற்குத் திட்டமிடுவது பற்றி எந்த ஒரு ஆடம்பரமோ விளம்பரமோ இல்லை. தன்னடக்கமானவர்.
2)   257 பேரும் தீராத வயிற்றுவலி, காதல் தோல்வி, ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளால் (நன்றி: மத்திய அமைச்சர்) தற்கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு அதற்கு என்ன வழியைப் பின்பற்றலாம் என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருந்தபோது ஆர் டி எக்ஸ் மழை பொழிந்து  கைகொடுத்தவர். (உபரித்தகவல்: குண்டுவெடிப்பில் காயமடைந்த 700 சொச்சம் பேரும்  தங்களைத் தாங்களே துன்புறுத்தி மகிழும் மஸோகிஸம் என்ற மனவியாதியால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலயே தியாகி அவர்களைக் காயப்படுத்தினார்.)
3)   அப்படியே இல்லாவிட்டாலும் 257 பேரும் எப்படி இருந்தாலும் என்றோ ஒரு நாள் சாக வேண்டியவர்கள் அல்லவா? எதற்கோ காயப்பட்டுக்கொள்ள வேண்டியவர்கள் அல்லவா?
4)   குண்டு போட்டது தவறென்றால் தினம் குக்கரில் குண்டு போடுகிற குடும்பத் தலைவிகளை மட்டும் இந்த சமூகம் ஏன் கண்டுகொள்ளவில்லை? அவர்கள் பெரும்பான்மை, பார்ப்பன, பனியா முதலாளித்துவ அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள்ளாக இருப்பதால்தானே?.
5)   அவர் ஒரு நிரபராதி. அப்பாவி. (சின்னத்தம்பி பிரபுவின் வேடத்தில் முதலில் அவர்தான் நடிப்பதாக இருந்தது. என்பது கூடுதல் தகவல்.)
6)   அவர் ஒரு போராளி. (நிரபராதி = போராளி என்பது பிரபலமான இணைய உலக சமன்பாடு)
7)   மும்பை குண்டுவெடிப்பு நடந்தபோது அவருக்கு வயது வெறும் 31. பால் மணம் மாறாத அந்த பாலகரைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கல்லவா அனுப்பியிருக்க வேண்டும்?
8)   தூக்கிலிடும்போது அவரது வயது 53. அவரை முதியோர் கல்விக்கூடத்துக்கு அனுப்பியிருந்தால் மனம் மாறி 257 பேரையும் உயிர்ப்பித்திருப்பார் அல்லவா?
9)   அவர் தனது 12வது வயதில் பள்ளியில் படிக்கும்போது குண்டெறிதல் போட்டியில் கலந்து கொண்டது பிடிக்காமல் அவரது அப்பா அன்று மாலையே அவரது காதைப்பிடித்துத் திருகினார். இப்போது குண்டெறிதலுக்காக அவருக்கு மரணதண்டனையா? ஒரே குற்றத்துக்கு இரு முறை தண்டிப்பது இந்திய நீதி நிர்வாகத்தின் அராஜகத்தைத்தானே காட்டுகிறது?
***
இந்த இரண்டு பேரில் யாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது தமிழ் இணைய மரபை அறிந்தவர்களுக்குத் தெரிந்ததுதானே?
பி.கு:

இணையத்துக்கு வெளியே ஒரு அயோக்கிய உலகம் இருக்கிறது. அங்கிருக்கிற வெகு ஜன விரோதிகள் மக்கள் தலைவருக்கு எவ்வாறு அஞ்சலி செலுத்த வேண்டுமோ அவ்வாறு அன்புடன் பிரியாவிடை கொடுத்துவிட்டனர், அற்பர்கள்.  மோடம் என்றால் என்னவென்று கூடத்தெரியாத புல்லர்கள்! நமக்குத்தான் இணையம் இருக்கிறதே! இணையம் மட்டும் இல்லாவிட்டால் மும்பை தியாகிக்கு மரணத்துக்குப்பின்னும் எவ்வளவு பெரிய அநீதி நடந்திருக்கும்!.... கடவுளே!   

Tuesday, 27 January 2015

சர்ச்சையொரு பாகம்

ஈயத்துக்கும் பித்தளைக்கும் யார் அதிகம் இளிப்பது என்று போட்டி வந்தால் என்ன ஆகும்?
இந்துத்துவ கும்பலுக்கும்  So called முற்போக்காளர்களுக்கும் மோதல் வரும்போது தானாகப் புரிகிறது.
அந்த சர்ச்சைக்குரிய நாவலின் PDF கிடைத்தது. அப்படியொன்றும் முற்போக்கும் இல்லை, பிற்போக்கும் இல்லை. குழந்தை இல்லாத தம்பதிகளின் தனிப்பட்ட சோகக்கதை போலிருக்கிறதே தவிர பண்பாட்டுப் பதிவு அல்லது பண்பாட்டுக்கெதிரான கலகம் என்றெல்லாம் எதுவும் அதில் ஆழமாக இல்லை.
இந்தச் சர்ச்சையில் இந்துத்துவ கும்பல் உள்ளே நுழைந்திருக்காவிட்டால் அந்த நாவல் இந்தப் புத்தகக்கண்காட்சியிலும் வரும் ஆண்டுகளிலும் தூசியும் தும்புமாகக் கிடந்திருக்கும். சில ஆண்டுகளில் காணாமலும் போயிருக்கும். அம்மாதிரி நேர்ந்துவிடாமல் இதில் பாலியல் சித்திரிப்புகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறதென்று சரோஜாதேவி ரசிகர்களான சுத்தத் தமிள் வாசகர்களுக்குத் தெரியப்படுத்தி சாதி, மத, முற்போக்கு, பிற்போக்கு வேறுபாடின்றி யாவரும் ஒளித்து வைத்துப் படிக்க PDF அளித்து இணையத்தமிழனின் நாக்கைச் சப்புக்கொட்ட வைத்ததுதான் பிற்போக்குவாதிகளின் சாதனை. புத்தகத்தை எரித்தவர்களே வீட்டுக்கு வந்ததும் கனகாரியமாக PDF தேடியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இதில் வழக்கம்போல் கருத்து சுதந்திரவாதிகளின் எகிறல்கள். பிற்போக்குவாதிகள் எங்கும் எப்போதும் பிற்போக்காக இருந்து கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவது என்று தெளிவாக இருக்கிறார்கள். பாவம், முற்போக்காளர்களுக்கு அந்த வசதி இல்லை.
விஸ்வரூபம் 1 வெளிவரும்போது கருத்து சுதந்திரத்தைக் கழற்றிவைத்துவிட்டு சிறுபான்மையினரைப் புண்படுத்துவது என்ற உற்சவத்தை நடத்தியாக வேண்டும். கவுண்டர்கள் ஆதிக்க சாதி என்பதால் ‘உணர்வு புண்பட்டு விட்டது’ பருப்பு இப்போது வேகாது. (இழிவு படுத்தப்பட்டது பார்ப்பனர்களாக இருந்திருந்தால் பாலச்சந்தர் சினிமா பார்த்த எஃபெக்டே  கிடைத்திருக்கும். பாவம், முற்போக்காளர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்!)
விஸ்வரூபம் 2 வந்து தொலைத்தால் இந்தக் கருத்து சுதந்திர மை ஈரம் காய்வதற்குள் ‘சிறுபான்மை புண்படுவது’ உற்சவத்துக்கு மீண்டும் தயாராக வேண்டும்! பாவம், தமிழகத்தில் உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட இனம் என்றால் முற்போக்காளர்கள்தான்!  
ஆனால் மொத்தத்தில் அந்தப் புத்தகத்தால் தமிள் மரபு காப்பாற்றப்பட்டுவிட்டது. தமிள் மரபு = ஒரு சூழலை நாமே உருவாக்கி வளர்த்துவிட்டு அது நமக்கு வேண்டியவர்களைப் பாதிக்கும்போது மட்டும் குய்யோமுறையோ என்று கூக்குரலிடுவது.
(ஐயம் தெளிவுறக் காண்க: சின்மயி விவகாரம்.)

பிறரது கருத்துகளால் புண்படுவதும் அந்தப் புண்ணைச் சொறிந்து சொறிந்து சுகம் காண்பதும்  தமிளர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. இன்றைக்கு என்ன கிழமை? என்றால் ஞாயிற்றுக்கிழமை என்றால் கிறிஸ்துவர்களும் வெள்ளிக்கிழமை என்றால் இஸ்லாமியர்களும் இந்துத்துவர்கள் ஏழு கிழமைகளுக்கும் புண்படும் நாள் வெகு விரைவில் வரக்கூடும். அப்போது காலண்டர் வெளியிடுவது கூடத் தமிள்நாட்டில் பண்பாட்டு சாதனை அல்லது பண்பாட்டுக்கெதிரான கலகத்தின் குறியீடாகலாம். 

பார்ப்பனர்கள் ஒடுக்கப்படுகிறார்களா? 4


முதல் மூன்று பகுதிகளிலேயே 4வது கேள்விக்கான பதில் இருக்கிறது. முதல் மூன்றினால் மனம் வெறுத்த பார்ப்பனர்கள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் முழு உண்மையல்ல.
வேலைவாய்ப்பிலும் பின் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது பார்ப்பனர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறதே தவிர முடக்கி விடவில்லை. எரிச்சலடைந்து வெளியேறுவதற்கும் முடங்கிப்போய் வாழ  வகையற்று வெளியேறுவதற்கும் உள்ள வித்யாசத்தை திராவிடம் அவ்வப்போது நிலைமையை அனுசரித்து மழுப்பியும் தீட்டியும் கொள்ளும்.


பார்ப்பனர்கள் தமிழகத்தைவிட்டு வெளியேற திராவிடமும் அவர்களுக்கு அருளும் ஆசியும் வழங்கிய ஆங்கிலேயர்களும் ஒரு விதத்தில் மறைமுகமான ஒரு காரணியாக இருந்ததற்கு வேண்டுமானால் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். திரும்பத் திரும்ப அவர்கள் செய்த பொய்ப்பிரசாரத்தின் விளைவாக தாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணம் பார்ப்பனர்களின் மனதில் ஆழமாகப் படிந்துவிட்டது. அதுதான் அவர்களது வெளியேற்றத்துக்கு மற்ற எதையும்விட முக்கியக் காரணம்.  அதற்காக பார்ப்பனர்கள் என்னமோ வருத்தமும் வேதனையுமாக வெளியேறியதாக எண்ண வேண்டாம். நல்ல வேளை, தப்பினோம், நாம் இந்த மண்ணைச் சேர்ந்தவர்களல்ல, என்று பெருமிதமும் மகிழ்ச்சியும் கொண்டே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். தாய்மண்மீதான இந்த அடிப்படைத் தாழ்வுணர்ச்சி ஒன்று போதாதா, பார்ப்பனர்கள் இந்த மண்ணுக்கே உரிய பச்சைத் தமிழர்கள் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்? 

Thursday, 8 January 2015

பார்ப்பனர்கள் ஒடுக்கப்படுகிறார்களா? 3 (திராவிடப் பண்ணை)

3வது பாயிண்ட்: பார்ப்பனர்கள் பண்பாட்டைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.
குடுமியைத் துறப்பதில் துவங்கிய பார்ப்பனர்கள், மடிசார், பஞ்சகச்சம்,  அக்ரஹார பாணி வீடுகள் எல்லாவற்றையும் கொஞ்சங்கொஞ்சமாக விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு திராவிடம் எவ்வளவு தூரம் பொறுப்பு என்பதில் திராவிடர்களுக்கே தெளிவில்லை. ஒரு சமயம் கைப்புள்ளத்தனமாக பெரியார் பிறந்த மண்ணில்லே, இங்க பார்ப்பான் குடுமி வெச்சுக்க முடியுமா? என்று சவடால். வேறு சமயம் நாங்களா, பார்ப்பான் குடுமிய அறுத்தோமா? ஐயையோ? ஒரு FIR கூடப் பதிவாகலியே? என்பார்கள்.
பார்ப்பனர்கள் மட்டுமா பண்பாட்டு விஷயத்தில் மாறியிருக்கிறார்கள்? மற்றவர்களும் பின்கொசுவம் வைத்த சேலை, காது வளர்த்துத் தண்டட்டி அணிவது எல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக மாறித்தானே வருகிறது? அதனால் இதற்கு திராவிடம் பொறுப்பல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். படிப்பு மற்றும் மேற்குலக கலாசாரத்தின் தாக்கம் சில விஷயங்களை இயலாததாக்கிவிட்டது. இயன்ற விஷயங்களையும் செய்ய விடாமல் இம்மண்ணின் மைந்தர்களுக்கே உரிய சொந்தக்கலாசாரம் பற்றிய தாழ்வுணர்ச்சி தடுக்கிறது.
பார்ப்பனக் கலாசாரத்தில் தப்பிப் பிழைத்தது இசை, உபந்நியாசம் போன்றவைதான். இவையும் கலாசார அடையாளங்களாக இன்றிப் பிழைப்புக்கான, பேர், புகழ், பணத்துக்கான வழி என்ற முறையிலேயே தப்பிப் பிழைத்துள்ளன என்பதை கவனிக்க வேண்டும். ஏழை பிராமணாள் ஹோட்டல் பேர்களை அழிக்காத சமயங்களில் அவ்வப்போது இவற்றைத் தாக்கி மகிழ்வது திராவிட வழக்கம்! தியாகராஜ உத்சவத்தில் தெலுங்குப்பாடல் பாடாதே என்பதுபோல சுத்த வீரப் போராட்டங்கள்! தெலுங்கிலேயே பாடல் எழுதின அவரது உற்சவத்தில் தமிழில் பாடுவது தவிரத் தமிழை வளர்க்க வேறு வழியே கிடையாது என்பது பகுத்தறிவு செண்டிமெண்ட்! ஆனால் இதனாலெல்லாம் பார்ப்பனீயம் அழிந்ததா?      
இந்து மதத்தின் அடையாளங்களான கோவில்கள், மந்திரங்கள் சொல்லி ஹோமங்கள் வளர்ப்பது போன்றவற்றில் தற்போது பார்ப்பனர்களைவிட மற்றவர்கள் இயல்பாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பின்திராவிட ஆன்மீக மறுமலர்ச்சியின் விளைவுகளில் இதுவும் ஒன்று.
திருவண்ணாமலை தீபத்துக்கு வருவோர் எண்ணிக்கை 15 லட்சம்! பெரியார் பிறந்த தமிழகத்திலிருந்து சபரி மலைக்குப் போகிறவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடுகிறதே தவிரக் குறைந்ததில்லை. திராவிடர்களின் பார்ப்பன அல்லது பார்ப்பனிய எதிர்ப்பில் அடிப்படை நேர்மை இருந்திருந்தால் இது சாத்தியமாகி இருக்காதல்லவா? பார்ப்பனர்களிடம் மட்டுமே இருந்த பார்ப்பனியத்தை அவர்களிடமிருந்து பிடுங்கிப் பரவலாக்கிய பெருமை திராவிடத்தையே சாரும். இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு.
George Orewellஇன் விலங்குப்பண்ணையில் உரிமையாளரான மனிதரை விரட்டிவிட்டு விலங்குகள் ஆக்கிரமித்துக்கொள்ளும். தலைமைப் பொறுப்பேற்கும் விலங்குகள் உழைக்கும் விலங்குகளுக்காக சில கட்டளைகள் எழுதி வைக்கும்.
முதலாவது கட்டளை: இரண்டு கால் கெட்டது, நான்கு கால் நல்லது.
முழுதும் படித்து அறிந்துகொள்ள இயலாதவை இந்த வரியை மட்டும் மனப்பாடம் செய்தால் போதும். முதலில் பிற கட்டளைகள் ஒவ்வொன்றாக மீறப்படும் (எழுதி வைத்தவர்களாலேயே). கடைசியில் முதலாவது கட்டளையும். ஆதிக்க விலங்குகள் அக்கம்பக்கத்துப்  பண்ணை உரிமையாளர்களான மனிதர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்குப் பார்ட்டி நடத்தும். அவை ஒன்றாக அமர்ந்து விளையாடி, விருந்துண்ணும் காட்சியை உழைக்கும் மிருகங்கள் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஏக்கத்துடன் பார்க்கும். உள்ளே இருந்தவற்றில் மிருகம், எது மனிதன் எதுவென்று வெளியில் இருந்தவற்றுக்குப் புரியவில்லை என்று கதை முடியும். இதை நம் திராவிடப்பண்ணைக்குப் பொருத்திப் பார்த்தால்

(நூல் அணியாதது நல்லது, அணிந்தது கெட்டது என்பதே முதல் திராவிடக் கட்டளை என்று மனதில் கொண்டு மிச்சத்தைக் கற்பனை செய்துகொள்ளவும்) பத்ரியின் மூன்றாவது பாயிண்டுக்கு விடை கிடைக்கும்.  

Saturday, 3 January 2015

பார்ப்பனர்கள் ஒடுக்கப்படுகிறார்களா? -2

பார்ப்பனர்கள் சமூகத்தளத்தில் அவமதிக்கப்படுகிறார்கள் என்ற இரண்டாவது வாதம்:

இதற்கான பதில் நாம் சமூகத்தளம் என்று எதை நினைக்கிறோம் என்பதைப் பொறுத்தது. சினிமாதான் சமூகம் என்று திராவிடத்தனமாக நினைத்தால் சமூகத்தளத்தில் பார்ப்பனர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்தான். ஒரு வேளை இணையம் என்று எடுத்துக்கொண்டால் (பத்ரி இங்கு அதிகமாக இயங்குவதால் அவருக்கு இப்படித் தோன்றியிருக்கலாம்.) அதிலும் பார்ப்பனர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இதுதான் சமூகமா? அம்பி, ஆம்படையாள், அபிஷ்டு என்று பார்ப்பனர்களைக் கேலி செய்கிற சினிமாவானாலும் பூஜைபோட பார்ப்பனர்தானே வரவேண்டும்? அதுபோலவே இணையத்தில் இருக்கிற பல முற்போக்காளர்கள் உண்மை வாழ்க்கையில் எப்படி என்று யாருக்குத் தெரியும்?

யாருக்காவது தூக்கு தண்டனை என்றால் இணையத்தில் திடீரென்று இன்ஸ்டன்ட் புத்தர்கள் அவதரித்துவிடுவார்கள். ஆனால் உண்மை சமூகம் எப்போதும்போல் டாஸ்மாக், தினத்தந்தி கள்ளக்காதல், அண்ணன் தம்பி வெட்டிக்கொலை என்றுதானே  இருக்கிறது? இணைய முற்போக்கு விஷயமும் அப்படித்தான் இருக்க வேண்டும். இணைய முற்போக்காளர்களில் எத்தனையோ பேர் சந்தியாவந்தனம் கூட செய்துகொண்டிருக்கக்கூடும். இணையம் எந்த விதத்திலும் உண்மை சமூகத்தின் பிரதிபலிப்பல்ல.  உண்மை சமூகம் பார்ப்பனர்களுக்கு முன்பைவிட அதிகமாகவே மரியாதை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உலக மயமாதல் போன்ற பல காரணங்களால் வாழ்க்கை அழுத்தங்கள் அதிகரித்தது போதாதென்று திராவிடம் ஏற்படுத்திய தொல்லைகளிலிருந்தும் காத்துக்கொள்ள மக்களுக்கு ஆன்மீகம் தவிர வேறு வழியில்லை. அதனால் பார்ப்பன வந்தேறிகள் ஆதிக்கம் செலுத்திய  கடந்த 2000 ஆண்டுகளைவிடவும் பின் திராவிட காலத்திய 25 வருடங்களில் தமிழகத்தில் ஆன்மீகம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆனால் ஆன்மீகமும்- அதை ஆன்மீகம் என்பதைவிட மதம் என்பதே சரி- மதமும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. இந்து மதம் கார்ப்பரேட் மயத்துக்கு வசதியாகப் பல விதங்களில் தன்னை மாற்றிகொண்டுவிட்ட இக்காலத்தில்- திருக்கார்த்திகையைக்கூட லைட்ஸ் டே என்று கொண்டாட வாய்ப்புகள் மிகுந்த இக்காலத்தில் பார்ப்பனர்களின் தேவை கூடியிருக்கிறதே தவிரக் குறையவில்லை.

பார்ப்பன, பனியா முதலாளித்துவம் என்று வினவு அவ்வப்போது அர்ச்சிக்கும் கூட்டணி மற்ற எந்த இடங்களையும் விட மதம் என்கிற தளத்தில் மிகுந்த பலம் பெற்று வருகிறது. இந்த மூவருக்குமே பொதுவானது வளைந்து கொடுக்கும் தன்மைதான். இந்த மூன்றின் எதிரிகள் இதைப் பிழைப்புவாதம் என்றும் கூறலாம். இந்த மூன்றையும் கம்யூனிஸமோ பெரியாரிஸமோ வேறு இஸங்களோ ஒரு காலத்திலும் அழிக்கவே முடியாது என்பது வரலாறு காட்டும் உண்மை.

பிழைப்புவாதம் என்பது மனித இனத்திடம் இயல்பாகவே கலந்த விஷயங்களில் ஒன்று. எந்தப் புரட்சி, எழுச்சி, கிளர்ச்சி நடந்தாலும் அதற்குப் பின்னால் சித்தாந்தங்களுக்குப் பின்னால் பிழைப்புவாதம் ஒளிந்தே இருக்கும்  அதனால்தான் உலகெங்கும் கம்யூனிஸ அரசாங்கங்கள் வன்முறையை நம்ப வேண்டியிருந்தது. மார்க்ஸின் சித்தாந்தங்கள் சொந்த பலத்தில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை கம்யூனிஸ்டுகளுக்கே இல்லாததால்தான்- பிழைப்புவாதம் எப்போது தலைதூக்குமோ என்ற அச்சத்தால்தான்- அடக்குமுறையே அவர்களின் வழிமுறையானது. ஆனால் புரட்சியை ஏற்படுத்திய சித்தாந்திகள் தலை மறைந்த அடுத்த கணமே புரட்சியின் பலன் பிழைப்புவாதிகளின் கைக்குத்தான் போய்ச்சேரும்.

இந்தப் பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு திராவிடப் பண்பாட்டு வரலாற்றைக் கொஞ்சம் பார்க்கவேண்டும். 60களில் (பெரியார், அண்ணா காலத்தில்) திராவிடர்கள் தாங்கள் கோவிலுக்குப் போக மாட்டார்கள். அதாவது அவர்கள் மனைவிகள் போவார்கள். (பொதுவாக எந்த திராவிடரும்  எக்காலத்திலும் முன்பின் தெரியாதவர்களைத்தான் புண்படுத்துவாரேயன்றி தனக்கு சகல உரிமையும் உள்ள தன் மனைவியைப் புண்படுத்த மாட்டார்.) மனைவி கோவிலுக்குப் போவதை அனுமதிப்பதால் அவர்களது பகுத்தறிவு போலி என்று பொருளல்ல, பெரியார் பெண்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே, அதற்காக…….

அப்புறம் 80களில் (பெரியார், அண்ணா மறைவுக்குப்பின்) தாமே கோவிலுக்குப் போகத் துவங்கினர். (எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது சார். வீட்ல கம்பெல் பண்றாங்க)

90களுக்குப்பின் அசுர வேகம்! கோவில்களில் கரைவேட்டிகளை மக்கள் சர்வசகஜமாகக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளத் துவங்கினர். புதிதாக முளைக்கிற கோவில்களுக்கு அவர்களது உதவி, பங்களிப்பு, கோவில் நிர்வாகக் கமிட்டிகளில் இடம் எதுவுமே இப்போது ஜீரணிக்க முடியாத விஷயமல்ல. தங்கள் மனைவிகளின் உணர்வுகளை எப்போதும் மதிக்கும் திராவிடர்கள் தமிழக ஆன்மீக மறுமலர்ச்சியில் தாங்களும் பங்கேற்றதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால்  வியப்பான விஷயம் அந்த மறுமலர்ச்சியால் ஒரு தலித்தாவது பிற்பட்டவராவது பலன் அடையவில்லை மொத்தப் பலன்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கிடைத்தது என்பதுதான்.

இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட, பார்ப்பன அடிவருடிப் பல்லவ,  சோழர்கள் கட்டிய பாரம்பரியமான கோவில்களில் பிற சாதி அர்ச்சகர்களை நியமிக்க கோர்ட் வழக்கு, தடை, கிடை எதையோ காரணம் காட்ட முடியும். பச்சை திராவிடர்கள் கட்டிய - அவர்களே கமிட்டித் தலைவராக இருக்கிற புதுக்கோவில்களில் கூட தலித்/பிற்பட்ட அர்ச்சகரை நான் கண்டதில்லை. (பெரியார் பிறந்த மண்! பாவம் ஏற்கெனவே ஒடுங்கிப்போனவர்களை அர்ச்சகராக்கி இன்னும் ஒடுக்கினால் பெரியார் மன்னிக்க மாட்டார்.) சரி, அவர்களது வீட்டு விசேஷங்களிலாவது தலித்/ பிற்படுத்தப்பட்டவர்களைப் புரோகிதராக்கலாம் என்றால் இஷ்டம்போல செய்ய இதென்ன நாட்டு விஷயமா? வீட்டு விஷயம். (அதிலும் மனைவியைப் புண்படுத்தக்கூடாது.) பிறகு யாரை அழைப்பது? பார்ப்பனர்களின் ஒரு பிரிவுக்கு லாட்டரி அடித்தது. அடித்தட்டுப் பார்ப்பனர்களின் ஒரு வகை பற்றி சொல்லாமல் விட்டிருந்ததை இப்போது சொல்லுகிறேன். பார்ப்பன மறுமலர்ச்சி என்று நான் சொன்னது இவர்களைக்குறித்துதான்.

ஏழைப் பார்ப்பனர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்தான். பார்ப்பனர்களில் வேதம் அவ்வளவாக வராதவர்கள், உழைக்கவும் முடியாதவர்கள்/விரும்பாதவர்கள். இவர்களின் வேலையே தானம் வாங்குவதுதான். தானமே இவர்களது வருவாய்.

எல்லாரும் நினைப்பதுபோல் எல்லா பார்ப்பனர்களும் தானங்களில் பிழைத்தவர்கள் அல்லர். தானங்களில் இரண்டு வகை உண்டு. வேதம் கற்பதை ஊக்குவிக்கவும் பராமரிக்கவும் உலக நன்மைக்காக செய்யும் யாகங்கள் போன்றவற்றுக்காகவும் மன்னர்களால் வழங்கப்பட்ட பொதுவான தானங்கள். இவை பெரும்பாலும் கோதானம், பூதானம் போன்ற மதிப்புமிக்க பொருட்களாகவே இருக்கும். பிரிட்டிஷ் வருகைக்குப்பின் அடியோடு ஒழிந்தது. இது நன்கு படித்த பார்ப்பனர்களுக்கு அவர்களது வேத அறிவு நன்கு பரீட்சிக்கப்பட்டபின்பே வழங்கப்பட்டது. இரண்டாவது வகை குறிப்பிட்ட கர்மங்களின் பகுதியாக- யாகங்கள் அல்லாத தனிப்பட்ட நன்மைக்கான பரிகார ஹோமங்களில் சில தோஷங்கள், பாவங்கள் கழிய வழங்கப்பட்டவை. வேதத்தை நன்கு படித்தவர்கள் இதை வாங்குவதை இழிவாகவே கருதினர். (இவ்வகையிலும் பூதானம், கோதானம் போன்ற மதிப்புமிக்க பொருட்களை மட்டும் நன்கு கற்றவர்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வாங்கிக்கொண்டு பிராயச்சித்தம் செய்து கொள்வர்) மற்ற தானங்கள் குறிப்பாக இறுதிச்சடங்குகளில் செய்யப்படும் சில வகை தானங்களை இவர்கள் எக்காலத்திலும் வாங்க மாட்டார்கள். ஆனால் வேதம் சரியாகக் கற்காதவர்களுக்கு இதுவே வருமானமாக இருந்தது. ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் இவர்கள் நிலையில் பெரும் வீழ்ச்சி உண்டானது. காரணம் திராவிடம் அல்ல, மேல்நாட்டுக்கல்வி கற்ற பார்ப்பனர்கள் வேதச் சடங்குகளை விட்டதும் நன்கு வேதம் படித்தவர்கள் எண்ணிக்கை குறைந்ததும்தான். அதன் பலன் இவர்களைத்தான் அதிகம் பாதித்தது. 
இந்தக் கூட்டம் உழைக்கத் தயாராக இல்லாததால் இவர்களது மனைவியர் அப்பளம் இடவும் சமையல் எடுபிடிவேலைகளுக்கும் செல்ல நேர்ந்தது. இந்தச் சோம்பேறிகள் திண்ணைதூங்கிகளாகவும் கெட்ட பழக்கங்களில் சிக்கியும் திரிந்ததை நானே என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

பார்ப்பனர்களுக்குப் புரோகிதம் செய்யும் அளவு வேதம் கற்காத, பாரம்பரியக் கோவில்களில் பூஜை செய்யத் தகுதி இல்லாத வேறு வகையில் உழைக்க முடியாத/விரும்பாத இவர்கள்தான் பின்திராவிட ஆன்மீக மறுமலர்ச்சியால் செழித்தவர்கள்!

இன்று பார்ப்பனர்களின் இறுதிச்சடங்குகளில் தானங்கள் வாங்க ஆள் கிடைப்பது மிகவும் கடினம் என்று பார்ப்பன புரோகிதர்கள் புலம்புவது சர்வசகஜம். தானம் வாங்குவதையே நம்பியிருந்த அரைகுறை வேதப் பார்ப்பனர்கள் எல்லாரும் பார்ப்பனரல்லாதோருக்குப் புரோகிதம் செய்கிறார்கள். பார்ப்பனர்களிடம் அஞ்சு, பத்துக்குக் கையேந்தியவர்களை ஐயர், சாமி, என்று மரியாதையுடன் அழைப்பதுடன் கண்ணை மூடிக்கொண்டு பணத்தையும் அள்ளிவிடத் தயாராகப் பார்ப்பனரல்லாதவர்கள் (இதில் பச்சை திராவிடர்கள் பாதிக்குப் பாதி அடக்கம்!) இருக்கிறார்கள்.            

மேற்படி அடித்தட்டுப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு பெரிய நன்மையை மேல்தட்டு ‘அவாள்’கூட செய்ததில்லை. பார்ப்பனர் சங்கமோ முயன்றதுகூட இல்லை. இதற்கும் காரணம் பார்ப்பான் சடங்கு செய்தால்தான் பலன் என்ற நம்பிக்கை அல்ல, ஏழைப் பார்ப்பனர்கள் மீதான வர்க்கம் சார்ந்த கருணையே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்!

ஆக, சமூகத்தளத்தில் பார்ப்பனர்கள் முன்னைவிட மரியாதையாகவே இருக்கிறார்கள். வெளிநாடு செல்ல முடியாத, படிக்காத, உழைக்காத ஏழைப் பார்ப்பனர்கள் கவலையே கொள்ள வேண்டாம். இந்த மண்ணில் கடைசி திராவிடன் இருக்கிற வரை கடைசிப் பார்ப்பானுக்கும் யாதொரு குறைவுமில்லை. யுவகிருஷ்ணா குறிப்பிட்டுள்ள திராவிடக் கவசம் பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மட்டுமல்ல, பார்ப்பனர்களுக்கும் கிடைக்கும்.

Saturday, 20 December 2014

பார்ப்பனர்கள் ஒடுக்கப்படுகிறார்களா? -1

சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள பத்ரியின் கட்டுரையும் ஜெயமோஹனனின் கட்டுரையும் பார்ப்பனர்களைக் கையறுநிலையில் இருப்பவர்களாகக் காட்டுகின்றன. அவர்களது அதிகாரம் பறிபோய்விட்டது முழு உண்மை. கிராமங்கள், சிறு நகரங்களில் பார்ப்பனர்கள் சில தொழில்களைச் செய்வது கடினமாகிவிட்டது ஓரளவுக்கு உண்மை. ஆனால் பத்ரியும் ஜெமோவும் சொல்வது முழு உண்மை அல்ல. பார்ப்பனர்கள் உண்மையில் ஒடுக்கப்படுகிறார்களா? அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு எந்த அளவு திராவிடத்தினால் நேர்ந்தது என்பவை பற்றி எனக்குத் தெரிந்த உண்மைகளைப் பதிந்திருக்கிறேன்.
ஜெயமோஹன் சுட்டியுள்ள பத்ரியின் பாயிண்ட்களை நானும் எடுத்துக்கொள்கிறேன்.

1)அரசு வேலை, மற்றும் அதிகார இழப்பு:

வினவு காட்டுவதுபோல் பார்ப்பனர்கள் எல்லாரும் ஸ்ரீநிவாசன்களாக இருப்பது எவ்வளவு உண்மையில்லையோ அதே அளவு எல்லாரும் அசோகமித்திரன் கதாபாத்திரங்கள் என்பதும் உண்மையல்ல.  மற்ற எல்லா சாதிகளிலும் இருப்பது போலவே பார்ப்பனர்களிலும் மூன்று வர்க்கங்களும் உண்டு.

1)நிலப்பிரபுத்துவ அமைப்பில் பண்ணையார்களாக இருந்து பெரியார் பிறந்ததனால் விரட்டப்பட்டோ அல்லது தாங்களாகவே ஒதுங்கியோ பட்டணம் வந்து முதலாளித்துவ அமைப்புகளில் அங்கமாகி இன்னும் மேட்டிமைத்தனம் குறையாதவர்கள். மற்றவர்களுக்கு எவ்வளவு இவர்கள்மீது வயிற்றெரிச்சல் இருக்கிறதோ அதே அளவு சொந்த சாதிக்குள்ளும் உண்டு என்பதே உண்மை. ஆனால் திராவிடமும் இன்னும் எத்தனை பெரியார்களும் வந்தாலும் இவர்களை எதுவும் செய்ய முடியாது. பார்ப்பனர்கள் என்பதால் அல்ல பணம் படைத்தவர்கள் என்பதால். திராவிட வீரர்கள் யாரும் இவர்களிடம் வாலாட்ட முயன்றதுகூட இல்லை என்பதற்கு திராவிடம் அதன் உச்சகட்ட பலத்துடன் இருந்த காலத்தில் கூட இவர்கள் தமிழ்நாட்டில் தொழில் நடத்தி வளமாக வாழந்து வந்திருக்கிறார்கள் என்பதே அத்தாட்சி. திராவிட வெத்துவேட்டுகளின் தோள்கள் ஏழை பிராமணாள் ஹோட்டல் பேரை மாற்றுவதற்குத் தினவெடுக்குமே தவிர மறந்தும் ‘அவாள்’ மேல் கைவைக்க மாட்டார்கள்.  

2)அப்பளம் இட்டு விற்பவர்கள், ஹோட்டலில் சர்வர், கடைகளில் கணக்கெழுதுபவர்கள் முதலானோர் இதில் அடக்கம். (இவர்களில் முக்கியமான ஒரு வகையை மட்டும் விட்டிருக்கிறேன். பிற்பாடு தனியாக விளக்குவதற்காக.) இவர்களுக்குக் கையறுநிலையில் நொந்துகொண்டிருக்க நேரம் கிடையாது என்பதே உண்மை. இவர்களுக்கு திராவிடத்தினால் புதிதாக எந்த நஷ்டமும் இல்லை. ஏற்கெனவே அக்கிரஹாரத்தில் செய்துகொண்டிருந்த அப்பளம் இடுவதையும் சமைப்பதையும் பண்ணையார்வீட்டில் கணக்கெழுதுவதையும் நிலப்பிரபுத்துவத்தின் அழிவு காரணமாக இடம் மாற்றி சூழ்நிலை மாற்றி செய்ய வேண்டி வந்தது தவிர வேறு நஷ்டமில்லை.

3)திராவிடத்தினால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பன மத்தியவர்க்கம் மட்டுமே. ஆங்கில மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இடைநிலை அரசுப்பணிகளை ஆக்கிரமித்திருந்தவர்கள் இவர்கள்தான்.   
முப்பது, நாற்பது வருஷங்களுக்கு முன் திராவிட ஆதிக்கம் நிலைபெற ஆரம்பித்தபோது குடும்ப நிகழ்ச்சிகளுக்காகக் கூடுகிற பெரிசுகளிடம் அம்பி, பிராமணாளுக்கெல்லாம் படிப்புதான் என்ற டயலாக்கைக் கேட்காத சிறு மற்றும் இளம் பார்ப்பனர்கள் இருந்திருக்கவே முடியாது. அந்த டயலாக்கை சிரமேற்கொண்டதாலோ என்னமோ அவர்களில் பலர் பத்ரி சொல்வதுபோல் கூட்டமாகத் தமிழகத்தைவிட்டு (சிலர் இந்தியாவை விட்டும்) வெளியேறிவிட்டனர். உழைப்பு, சிக்கனம் காரணமாகப் போன தலைமுறையில் அப்பளம் இட்டவர்கள் இப்போது அமெரிக்காவுக்குப் போன கதை உண்டே தவிர (முதல் வர்க்கத்துப் பழங்காலப் பண்ணையார்களில் சிலர் தங்கள் சொந்த முட்டாள்தனம் காரணமாக வாழ்ந்து கெட்டு இரண்டாம் வர்க்கத்துக்கு சென்றது நீங்கலாக) இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டுப் படித்த மத்திய வர்க்கத்திலிருந்து அப்பளம் இடப்போனவர்கள் என்று யாரும் கிடையாது. சுருக்கமாக திராவிடம் எவ்வளவு வலிமையாக இருந்த காலத்திலும் பார்ப்பனர்களில் மேல் நோக்கிய நகர்வு மட்டுமே இருந்தது.

திராவிடர்களால் பார்ப்பனர்களிடமிருந்து அரசு வேலைகளையும்  அதிகாரப் பங்களிப்பையும் மட்டுமே பிடுங்க முடிந்தது. தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட சினிமாக்களில் அவர்களைக் கேலி செய்ய முடிந்தது. பொருளாதார ரீதியில் அவர்களைக்கீழே தள்ள இயலவில்லை. காரணம் அவர்களுடைய நாணல் போன்ற தன்மையே. குள்ள நரித்தனம் என்று திராவிடர்கள் கூறும் அவர்களது சூழ்நிலைக்குத் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது (பார்ப்பனர்கள் சிறந்த சமரசக்காரர்கள் என்று ஜெயமோஹன் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்) போன்ற பண்புகள்தான் காரணம்.

எல்லாப் பார்ப்பனர்களும் கல்வியாளர்கள் என்றும் கூற இயலாது. கம்ப்யூட்டர் கற்று வெளிநாடு போகும் அளவு  படிப்பு வராதவர்கள், தொழிற்கல்வி கற்க முடியாதவர்கள், விரும்பாதவர்கள், வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத முட்டாள்கள், சோம்பேறிகள் பார்ப்பனர்களிலும் உண்டு. அதனால்  இங்கேயே தனியார் கம்பெனிகளில் நிச்சயமற்ற வேலையில் முதலாளித்துவத்தின் கோரப்பிடியை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால் எந்த நிலையிலும் பார்ப்பனர்கள் அரசு வேலை இல்லை என்று கழிவிரக்கம் கொண்டு முடங்கிப்போய்விடவில்லை என்பதே கவனிக்கப்பட வேண்டியது. திராவிடர்களால் தங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டதற்காகவோ அவர்களது ஆதிக்கத்துக்குட்பட்ட சினிமாக்களில் கேலிப்பொருளானதற்காகவோ பெரியார் பிறந்த மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்ததற்காகவோ கலங்கி உட்கார்ந்து விடவில்லை. அவ்வப்போது போகிற போக்கில் பிராமணாளுக்கெல்லாம் யார் வேலை தர்றா? என்று புலம்பிக்கொள்வார்களே தவிர யாரும் வேலை இல்லாமல் இருக்கவில்லை. 

பார்ப்பனர்கள் கிராமங்கள் சிறு நகரங்களில் இருக்க முடியாததற்குக் காரணம் அங்கு சில தொழில்களைச் செய்ய அதிகார பலம், அரசியல் பின்னணி அல்லது அடியாள் பலம் தேவைப்படுகிறது. அது பார்ப்பனர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. திராவிட அரசியலின் பொதுவான இழிநிலையின் விளைவுதான். ஆனால் பார்ப்பனர்களுக்கு இந்த மூன்றும் கிடையாததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.

பார்ப்பன அதிகார இழப்புக்கு இரண்டு விதமாகக் காரணங்கள் கூறலாம்.

முதலாவது, அவர்களே உருவாக்கிய சாஸ்திரங்களை முதலில் அவர்கள்தான் மீறியது. பிரிட்டிஷ் ஆட்சி வந்ததும் பார்ப்பனர்களின் வேதத் தொழிலுக்குப் பாதுகாப்பு இல்லாததால் அதே நேரம் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய புது வேலைவாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருந்ததால் அவற்றின்மீது பேராசைகொண்டு வேதம் ஓதுவதை விட்டனர். இதற்கு சாஸ்திரங்கள் என்ன தண்டனைகளை சொல்லியிருக்கிறதோ அதைத்தான் (சொல்லப்போனால் அதைவிடக்குறைவாகத்தான்) தற்போது அனுபவித்து வருகிறார்கள். வேதம் ஓதும் தொழிலுக்கு ஆதரவில்லை என்றால் பட்டினி கிடந்து செத்தாலும் தர்மத்தை விடமாட்டேன் என்று உறுதியாய் நின்றிருக்க வேண்டுமே தவிரத் தனக்கென்று விதிக்கப்பட்ட தர்மத்தை விட்டிருக்கக்கூடாது அல்லவா? எந்த அரசு வேலையைப் பார்த்துப் பல்லிளித்து வேதத்தை விட்டானோ அதே அரசு வேலை அவனுக்கு வெகு சீக்கிரம் மறுக்கப்பட்டது நியாயம் மட்டுமல்ல, கவித்துவ நீதியும்தான்.

அரசு அலுவலகங்களில் ஜெயமோகன் சொல்கிற அளவு அவமானம் நிகழ்வதாக நான் கருதவில்லை. ஆனால் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு போன்ற சில விஷயங்கள் பார்ப்பனர்களை எரிச்சலடையச் செய்ததால் அடுத்த தலைமுறைப் பார்ப்பனர்கள் அரசு வேலைக்கு முயலவே இல்லை. அதுவும் தாங்களாகவே விலகிவிட்டனர்.
பிரிட்டிஷ் காலத்தில் அரசு வேலைக்குச் சென்றது தவறென்றால் திராவிடம் தலையெடுத்தபின் வெளிநாடு சென்றதும் பார்ப்பன சாஸ்திரங்கள்படி மஹாபாவம். பார்ப்பனர்கள் தாங்கள் சாதிக்கொடுமை செய்த காலத்தில் கீழ் சாதியில் பிறந்தது அவர்களது கர்மபலன் என்று சொன்னவர்கள். தனக்கு அரசு வேலை இல்லை என்றால் அதுவும் கர்மபலன் என்று இங்கேயேதானே வறுமையில் உழன்றிருக்க வேண்டும்? எதற்காக சாஸ்திர விரோதமாக வெளிநாடு சென்றார்கள்? இதற்குப் பார்ப்பனர்களிடம் எந்த நியாயமான பதிலும் கிடையாது.  

இரண்டாவது கோணம் பாவத்துக்கான தண்டனை என்றெல்லாம் பார்க்காமல் லௌகீகமான பார்வையில் இதை அணுகலாம்.  சாதியத்தை நிலைபெறச்செய்ததற்கான தண்டனை இது என்றால் அந்த வகையிலும் பார்ப்பனர்கள் அதிகார இழப்பை மனமுவந்து ஏற்பதே நியாயம்.
ஆனால் சாதியத்தின் அதிகார பலன்களைப் பார்ப்பனர்களோடு சேர்ந்து அனுபவித்த மற்ற சாதிகளுக்கு என்ன தண்டனை? என்று பார்ப்பனர்கள் திருப்பக் கேட்கிறார்கள். அப்போதுதான் இடைநிலை சாதிகளின் அடக்குமுறை பற்றிப் பேச்சு வருகிறது.  அது இப்போதும் தொடர்வதால் சூடான சர்ச்சைகளைக் கிளப்பிவிடுகிறது.   அதுதான் பார்ப்பனர்கள் தலித்துகளுக்காகக் குரல் எழுப்புவதுபோல் தோன்றக் காரணம்.
ஆனால் தங்கள் கையில் நிலவுடைமை இருந்த காலத்தில் தலித்துகளுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் காலம் ஓடிவிட்டது என்ற ஒரே காரணத்தால் மற்றவர்களுக்கு மறந்துவிடும் என்று எதிர்பார்ப்பதில் துளியும் நியாயம் கிடையாது.

அதனால்தான் நிஜமாகவே பார்ப்பனர்கள் தலித்துகள் மீதான அக்கறையுடன் இடைநிலைச் சாதிகள் மீதான அடக்குமுறை பற்றிப் பேசினாலும்கூட பிற்படுத்தப்பட்டவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பிரிப்பதற்கான பார்ப்பன சதி என்றே அதுவும் பார்க்கப்படுகிறது. தலித் உரிமைகள் பற்றிப் பார்ப்பனர்கள் பேசினால் போய்யா பொத்திக்கிட்டு என்றே எதிர்வினை வருவது இயல்பானதே. காரணம் அவர்களுக்கு தார்மீக பலம், தகுதி இல்லை. அதனால் பார்ப்பனர்கள் தலித்துகள் மீதான அடக்குமுறையைச்  சுட்டிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமே தவிர அதில் தங்களுக்கான நியாயப்படுத்தலை நுழைக்க நினைத்தால் அது பெருங்குற்றம். பார்ப்பனர்கள் இதை எப்போதும் எச்சரிக்கையுடன் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

உண்மையாகவே தலித்துகள் மீது அக்கறை கொண்ட சாதி உணர்வு இல்லாத பார்ப்பனர்களும் இருக்கலாம்தான். அவர்கள் நான் செய்யவில்லை, யாரோ எனது கொள்ளுத்தாத்தா செய்தார் என்று தப்பிக்க நினைப்பதில் பலன் இல்லை. முன்னோர்கள் செய்த பாபம் சந்ததிகளின் தலையில்தான் விடியும் என்பதும் பார்ப்பனர்கள் எழுதிவைத்ததுதான். நம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் இழிவுகளையும் நாம் சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக்கொண்டே ஆக வேண்டும். அடிப்படை நியாய உணர்ச்சி இருந்தால் சகிப்புத்தன்மை தானாக வரும்.


திராவிடம் தலையெடுத்துப் பிற்படுத்தப்பட்டவர்கள் கையில் அதிகாரம் சென்றபோது பார்ப்பனர்கள்  இயல்பில் வன்முறையை விரும்பாத தங்கள் குணத்தால் எந்த எதிர்வினையும் ஆற்றாமல்  அதிகார மையங்களைவிட்டு விலகிப் போய்விட்டனர். பார்ப்பனர்களைக் கரித்துக்கொட்டுபவர்கள் வேறு எந்த சாதியாவது இப்படி ஒதுங்கிப்போவார்களா என்று கொஞ்சம் சிந்திப்பது நல்லது. 

Saturday, 4 October 2014

இரண்டு முதல்வர்கள்


இனிமேல் ஜெயலலிதா ஆரியர் என்று யாரும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவரது கைதுக்கான எதிர்வினைகள் சுத்த அக்மார்க் தமிள் திராவிடமரபிலிருந்து சற்றும் வழுவவில்லை என்பதைத் தமிழக வரலாற்றாய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

முழுசாக ஒரு வாரம் முடிந்தபின்னும் ஜெயா டிவியில் உரத்த கூச்சல், அழுகை, சபதங்கள் ஓயக்காணோம். (தீவிர அம்மா ஆதரவாளர்களுக்குக்கூட ஒரு அளவுக்கு மேல் எரிச்சல் வர வாய்ப்புண்டு. இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பது -அல்லது இழக்காத செல்வாக்கை அதிகரிப்பதுபற்றி- ஜெயா டிவிக்கு ஆலோசனை சொல்ல யாரும் இல்லை போலிருக்கிறது.)

இது போதாதென்று ஜெயா டிவி பிடிவாதமாக ஒரு வாக்கியத்துக்கு இரண்டு, மூன்றுமுறை என்ற அளவில் ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. பாவம், லாலுவுக்கு (இந்தியாவில் எந்த முன்னாள் முதல்வருக்குமே) இந்த அதிர்ஷ்டம் கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்தியா முழுதும் எங்கும் காணக்கிடைக்காத ஒன்று சுத்தத் தமிள் நாட்டில் மட்டுமே வழக்கிலுள்ளது என்றால் என்ன பொருள்? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய தமிள் மரபு தனித்த நாகரிகத்துக்குச் சொந்தமானது, அது என்றுமே ஆரிய நாகரிகத்தின் ஒரு அங்கமாக இருந்ததில்லை என்பதுதானே?

இணையத்தில் பெரியாரை ஏதாவது விமர்சித்தால் இன்னிக்கு நாமெல்லாம் கம்ப்யூட்டர் முன்னால உக்காந்திருக்கோம்னா அதுக்குக் காரணமே அவர்தாங்க. தமிழர்களுக்குக் கம்ப்யூட்டர் கற்றுத்தந்ததே பெரியார்தாங்க என்று anachronisticஆக உதார்விடுகிற திராவிட அலப்பறைகள் இப்போது அரசியல் சட்ட முதல்வர் மக்கள் முதல்வர் என்று முதல்வரையே பகுத்து(?!) அறியும் அரசியல் நாகரிகமும் அவர் கற்றுத்தந்ததுதான் என்பார்களோ? இந்தப் பகுத்தறிவு மரபு முதல்வரோடு நிற்குமா அல்லது இனிமேல் எல்லா சட்டமன்ற / பாராளுமன்றத் தொகுதிகளிலும் acting MLA/MP மக்கள் MLA/MP என்று இரண்டு கோஷ்டிகள் உலாவருமா?  


Wednesday, 10 September 2014

“ அடிப்படைவாத சாஸ்திரிகள்”

விச்சு, மத்யானம் போஜனம் ஆச்சோ?

ஆச்சு அண்ணா.

(பிச்சுமணி அண்ணா பொடியை மூக்கில் செலுத்தி இரண்டு முறை தும்மிவிட்டு) அந்த வெத்திலைச் செல்லத்த சித்தே  இப்படிக் குடேண்டா அம்பி…...

(விச்சு தருகிறார். பிச்சுமணி வெற்றிலைக்காம்பைக் கிள்ளியபடி) நம்ம ராமசாமி மாமா கூப்பிட்டாரோ?

கூப்பிட்டார்.  நீங்க சொன்னாப்பில சரக்கு மொத்தமும் இன்னிக்குக் கைமாறிடும்னுட்டார் அண்ணா.

புதுசா வந்திருக்கற ஏஸி பிள்ளையாண்டான் ஏதாவது அச்சுப்பிச்சுன்னு பண்ணிட மாட்டானே?

என்னண்ணா இப்படி சொல்லிட்டேள்? போலீஸ் சப்ஜாடா நம்ம கைலன்னா இருக்கு?

இல்லடா நேக்கு என்னமோ இந்தத் தடவை கொஞ்சம் சம்சயமா இருக்கு.

என்னண்ணா சம்சயம்கிம்சயம்னுண்டு? சரிப்பட்டு வரலேன்னா ஒரே போடுஅவ்வளவுதானே? இது வரை 17 கான்ஸ்டபிள்கள், 12 இன்ஸ்பெக்டர்கள்,     3 டிஸிக்குப் பரமபதத்துக்கு வழிகாடியிருக்கோமே? இதெல்லாம் புதுசா அவ்விடத்துக்கு?

நோக்கென்னடா சுலபமா சொல்லிட்டே? நேக்குன்னா முழி பிதுங்கறது? போன தடவை ஆந்திரா பார்டர்ல சரக்கு கைமார்றச்சே ஒரு இன்ஸ்பெக்டருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வெச்சோமே, அதுக்கே வாய்ப்பிராணன் தலைக்கு வந்துடுத்துடா. இப்பல்லாம் தொழில் அவ்வளவு சுலபமா இல்லடா அம்பி. கலி முத்திடுத்தோல்லியோ?

அண்ணா, நீங்க எதுக்கும் விசனப்படாதீங்கோ.

ஹூம், செரி…… நாம பாட்டுக்கு பகவான் மேல பாரத்தைப் போட்டுட்டு நம்ம காரியத்தைப் பாக்கலாம்.

எந்த பகவான்?

என்னடா கேள்வி இது? நம்மளவா என்னென்ன பகவானை கும்பிடுவாளோ அந்த பகவானைதாண்டா.

இல்லண்ணா. எதுக்கும் க்ளியரா கேட்டுண்டா பெட்டர் இல்லியா? இதர மதஸ்தாள் மனசைப் புண்படுத்திடக்கூடாது இல்லியா?

சும்மா தொணதொணன்னு கூடக்கூட பேசிண்டிருக்காம அடுத்த விஷயத்துக்கு வாடா. காஷ்மீர் பார்டருக்குப் போன நம்ம கிச்சாமிகிட்டருந்து ஏதாவது தகவல் உண்டா?

சொல்ல மறந்துட்டேன் அண்ணா. கிச்சாமி மாமா இப்பத்தான் அஞ்சு நிமிஷம் மின்ன பேசினார். நமக்கு வேண்டின தகவல்களை ஹேக் பண்ணிட்டாளாம்.

அபிஷ்டு, இதன்னா முதல்ல சொல்லணும்? அப்ப வேலைய உடனே ஆரம்பிக்க வேண்டியதுதானே?

இல்லண்ணா, எதுக்கும் நம்ம பாச்சு அத்திம்பேர் ஒரு தகவல் அனுப்பினதும் கன்ஃபர்ம் பண்ணிண்டு செய்யலாம்னார் கிச்சாமி மாமா.

வர வர கிச்சாமி பண்றது ஒண்ணும் நேக்குப் புரியலே.

கோச்சுக்காதீங்கோண்ணா. நாலு பேர் கூடற இடத்தில     ஆர் டி எக்ஸ் வெக்கறதுன்னா சும்மாவா?

நேக்கு என்ன தோண்றதுன்னா ரங்கராஜன் மாமாவை எதுக்கும் முதல்ல பார்டருக்கு அனுப்பிப் பொஸிஷன் எடுத்துக்கச் சொல்லிட்டோம்னா பாச்சுகிட்டருந்து தகவல் வந்ததும் மளமளன்னு வேலைய ஆரம்பிச்சுடலாம் இல்லியா?

இப்பவே சொல்லிடறேன் அண்ணா.

எல்லாத்துக்கும் தலைய மட்டும் ஆட்டு. அது செரி, ஆம்படையாள் என்ன பண்றா?

என்னண்ணா தெரியாத மாதிரி கேக்கறேள்? அவளை இப்பத்தானே அஸ்ஸாம் பார்டருக்கு உளவு பாக்க அனுப்பிச்சோம்?

வயசாச்சோ இல்லியோ? மறந்துடறது. ஆனா இதுக்கு மட்டும் வயசே கிடையாதுடா அம்பி (அண்ணா லேசாகக் கண்ணடித்தார்). நம்ம குட்டிகளை எல்லாம் சித்தே இங்கே கூப்பிடறதுதானே?

(
வெற்றிலைச் செல்லத்தை மூடிய அம்பி ஸ்காட்ச் பாட்டிலைத் திறந்து கோப்பைகளை நிரப்பிவிட்டு அண்ணாவுக்கு சிகரெட் பற்றவைத்தபடி) அடியே! பாரு, சச்சு, எச்சுமிக்குட்டி, கமலம், காயத்ரி, சாவித்ரி, சந்த்யா, விஜயலக்ஷ்மி, நம்ம பிச்சுமணி அண்ணா கூப்பிடறது காதில விழலியா? வாங்கோடியம்மா! க்ளைமேக்ஸுக்கு முன்னால சின்னதா ஒரு குத்தாட்டம் வேண்டாமோ?

இயக்குநர் கட் சொன்னதும் அடுத்த காட்சியான குழு நடனத்துக்கு ஏற்பாடுகள் துவங்கின. கிடைத்த இடைவெளியில் சேரில் சாய்ந்துகொண்ட இயக்குநர் ஆசுவாசமாக ஒருசில பெருமூச்சுகள் விட்டுக்கொண்டார்.

அப்பாடா! இந்தத் தடவை யார் மனதையும் புண்படுத்தியதாக கேஸ், கூச்சல், எதிர்ப்புகள் எதுவும் கிளம்பாது. “ அடிப்படைவாத சாஸ்திரிகள்என்றே டைட்டில் வைத்து ஸ்க்ரிப்ட் எழுதுகையில் தலைமை வில்லன் முதல் அடியாள் வரை (குத்தாட்டம் ஆடுகிறவர்கள் உட்பட) எல்லார் பெயரையும் இரண்டு நாட்கள் ஆறஅமர யோசித்துப் பரிசீலித்து…… அப்பப்பா!.........  ஆனால் எதுவும் வீண் போகாது. வினவு, மதிமாறன் உட்பட இணைய விமர்சனம் முழுக்க ஆஹா ஓஹோ என்றே இருக்கும். படம் ஓடுகிறதோ இல்லையோ பிரச்சினைகளுக்கு சுபம் போட்டாகிவிட்டது. நிம்மதியுடன் கண்களை மூடிக்கொண்டார்.